போதையில் மயங்கி கிடந்த லாரி கிளீனர் இறந்ததாக நினைத்த நண்பர்


போதையில் மயங்கி கிடந்த லாரி கிளீனர் இறந்ததாக நினைத்த நண்பர்
x
தினத்தந்தி 24 March 2022 10:12 PM IST (Updated: 24 March 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே பூட்டிய வீட்டிற்குள் போதையில் மயங்கி கிடந்த லாரி கிளீனர் இறந்ததாக நினைத்த நண்பர் போலீசாரை வரவழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தக்கலை:
தக்கலை அருகே பூட்டிய வீட்டிற்குள் போதையில் மயங்கி கிடந்த லாரி கிளீனர் இறந்ததாக நினைத்த நண்பர் போலீசாரை வரவழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
லாரி கிளீனர்
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் மணக்காவிளையை சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் ஒருவர் லாரி கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கம் உண்டு. தற்போது கீழ சித்திரங்கோட்டில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவர் தினமும் வேலைக்கு சென்று விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் இரவில் மது குடித்து விட்டு வீட்டில் வந்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அதிக மது போதையில் வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார்.
நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் எழும்பவில்லை. இந்தநிலையில் வேலைக்கு செல்லாததால் அவர் பணியாற்றும் லாரியின் டிரைவரும் நண்பருமான வாலிபர் வீட்டிற்கு தேடி வந்தார்.
அசைவற்று கிடந்தார்
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. லாரி டிரைவர் வெளியே நின்று கதவை தட்டி கூப்பிட்டார். ஆனால், உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. உடனே, அவர் வீட்டின் ஆஸ்பெக்டாஸ் மேற்கூரை வழியாக உள்ளே பார்த்தார். அப்போது, லாரி கிளீனர் சமையல் அறையில் விழுந்த நிலையில் அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என நினைத்த டிரைவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே வீட்டுக்குள் அந்த லாரி கிளீனர் இறந்து கிடப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வீட்டின் முன் கூடத்தொடங்கினர்.
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து கொற்றிகோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் -இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்தனர். ஒரு போலீஸ்காரர் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கினார். அவர் லாரி கிளீனர் அருகே சென்று பார்த்த போது அவர் போதையில் மயங்கி கிடப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர் சிறிது தண்ணீரை எடுத்து கிளீனர் மீது ஊற்றினார். உடனே அவர் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். இதன்பின்னர், போலீசாரும், அவரை தேடி வந்த டிரைவரும் நிம்மதி அடைந்தனர். அத்துடன் அங்கு கூடி நின்ற பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
---


Next Story