முன்னாள் ராணுவ வீரர், கடலில் பிணமாக மிதந்தார்
மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ராணுவ வீரர், கொள்ளிடம் அருகே கடலில் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ராணுவ வீரர், கொள்ளிடம் அருகே கடலில் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் பிணமாக மிதந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் தீவு கிராமம் கடற்கரையோரத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கடலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் நேற்று மிதந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னாள் ராணுவ வீரர்
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் கடலூர் மாவட்டம் அம்மாப்பேட்டை லலிதாம்பாள் நகரை சேர்ந்த புகழேந்தி(வயது 50) என்பதும், முன்னாள் ராணுவ வீரரான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story