கோத்தகிரியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி


கோத்தகிரியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி
x
தினத்தந்தி 24 March 2022 10:19 PM IST (Updated: 24 March 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2-வது நாளாக அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை 2-வது நாளாக அகற்றும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 

நீரோடை ஆக்கிரமிப்பு

கோத்தகிரி பகுதியில் ஏராளமான நீரோடைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.

 இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய்த்துறையினர் நெடுகுளா அருகே உள்ள காவிலோரை கிராமத்துக்கு சென்றனர். 

அங்கு நீரோடையை ஆக்கிரமித்து சாகுபடி செய்து இருந்த பயிர்களை அகற்றினார்கள். 

2-வது நாளாக அகற்றம்

அப்போது விவசாயிகள் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால் அறுவடை செய்த பின்னர் அகற்றிவிடுகிறோம் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அறுவடைக்கு பின்னர் தாங்களாகவே அகற்றிக்கொள்ள அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2-வது நாளான கோத்தகிரி அருகே உள்ள நடுஹட்டி ஊராட்சி பட்டகொரை கிராமத்தில் உள்ள நீரோடையில் ஆக்ரமிப்புக்களை அகற்றும் பணி நடைபெற்றது. 

இதற்காக கோத்தகிரி தாசில்தார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் குமார், ஜெயசுதா மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

தேயிலை சாகுபடி

பின்னர் அவர்கள் அங்கு ஆய்வு செய்ததுடன் அளவீடு செய்தனர். அப்போது அங்கு 15 சென்ட் ஓடை நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தேயிலை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தேயிலை பயிர்களை அகற்றினார்கள். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. 

இதற்காக அனைத்து நீரோடைகளையும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் உடனடியாக அகற்றப்படும். எனவே விவசாயிகள் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றனர். 

இதே போல கோத்தகிரி தாலுகா நெடுகுளா ஊராட்சி உல்லத்தட்டி கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் சகுந்தலை தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள நீரோடையை ஆக்கிரமித்து 30 சென்ட்டில் தேயிலை சாகுபடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதை அகற்றினர்.


Next Story