கே.கே. 168 நரிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை என கூறி விவசாயிகள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கே.கே. 168 நரிப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை என கூறி விவசாயிகள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அரூர்:
அரூர் அருகே நரிப்பள்ளி கிராமம் உள்ளது. இங்கு கே.கே. 168 நரிப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் நரிப்பள்ளி, சிக்களூர், பெரியபட்டி ஆகிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1,400 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு சொசைட்டியில்அ.தி.மு.க.வை சேர்ந்த சிற்றரசு என்பவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் வைத்த விவசாயிகள் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்று பார்த்தனர். ஆனால் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர்கள் அரூர்- நரிப்பள்ளி சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வரவு செலவு வைத்து வருகிறோம். எங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை. சொசைட்டி தலைவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story