துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்
அக்கரைப்பேட்டை பகுதியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நாகை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
அக்கரைப்பேட்டை பகுதியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என நாகை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
நாகை ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் அனுசியா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதா வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் சரபோஜி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-
நிதி பற்றாக்குறை
மணிவண்ணன்(அ.தி.மு.க.):- பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக முடிவடையாமல் உள்ளது.நிலுவையில் உள்ள திட்டப் பணிகளுக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கருங்கல்லை கொட்டி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி(அ.தி.மு.க.):- தெத்தி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்ததால் உடலை 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நாகூருக்கு கொண்டு சென்று தான் அடக்கம் செய்ய வேண்டும். தெத்தி பகுதியிலேயே இடம் இருந்தும் சுற்றுச்சுவர் இல்லாமல் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. எனவே அங்கு சுற்றுச்சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள்
காளிதாஸ்(அ.தி.மு.க.):- அக்கரைப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், எங்கு பார்த்தாலும் குப்பை கூழங்களாகவும், சாக்கடை கழிவுகளாகவும் காட்சி அளிக்கிறது. இதனை சரிசெய்ய தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். திடீர்குப்பத்தில் புதிய புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் கட்ட வேண்டும்.
கவுரி(தி.மு.க.):- சிக்கல் முக்கிய பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும். பொதுமக்களுக்கும், விவசாயத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை உடனடியாக பிடிக்க வேண்டும்.
ஆகாய தாமரை செடிகள்
மாலதி(தி.மு.க.):- ஊராட்சிகளில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு போதிய தகவல் கிடைக்காததால், பங்கேற்க முடியவில்லை. இதனால் மக்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஊராட்சி பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகள் நடந்தால் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆவராணி புதுச்சேரி பெருமாள் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சி திட்ட பணிகள்
அனுசியா (தலைவர்):-தற்போது தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால், இதனை வைத்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தேவைப்படும் பணிகளுக்கு அரசிடம் உரிய நிதியை பெற்று, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
முன்னதா உயிரிழந்த ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பழனிவேலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் மலர்விழி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story