பெண்கள் முன்னேற்றத்திற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் மாநில மகளிர் ஆணைய தலைவர் வேண்டுகோள்
பெண்கள் முன்னேற்றத்திற்கு அனைவரும் பணியாற்ற வேண்டும் மாநில மகளிர் ஆணைய தலைவர் வேண்டுகோள்
கிருஷ்ணகிரி:
பெண்கள் முன்னேற்றத்திற்காக அனைவரும ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கூறினார்.
ஆய்வு கூட்டம்
மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மகளிர் பாதுகாப்பு மற்றும் மகளிர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் திட்டங்களை வழங்கி உள்ளார். மகளிர் ஆணையத்தின் முக்கிய நோக்கம் பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல், பெண் கல்வி, பெண் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பெண்களுக்கு முழுமையாக உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு குழந்தை திருமணம் தடுப்பு, பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தொலைபேசி எண்
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சியில் புதியதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பெண் மக்கள் பிரதிநிதிகளை உறுப்பினராக கொண்டு குழு ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் சென்னையில் பயிற்சி கருத்தரங்கு நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்காக 181 எண்ண கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் பெண்களுக்கான சட்ட உதவிகள், மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றி கூடிய இடங்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினால் அங்கு கட்டாயம் உள் புகார் குழுக்கள் அமைக்க வேண்டும். பெண்களுக்கு தங்களுக்கு பிரச்சினை என்று வரும் போது அவர்களிடம் கனிவாக பேசி கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை காப்பதற்கும் பெண் கல்வி ஊக்குவிப்பதற்கும், குழந்தை திருமண தடுப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்றவற்றை முற்றிலும் தடுப்பதற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
தொடர்ந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுரி வளாகத்தில் இயங்கி வரும் 1 ஸ்டாப் சென்டர் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து மகளிர் ஆணைய தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி, மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை அலுவலர் தங்கமணி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாமுகமது, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story