உத்தனப்பள்ளி அருகே விபத்தில் தோட்டக்கலைத்துறை அதிகாரி பலி மனைவியின் பிரசவத்திற்காக சென்றபோது நேர்ந்த சோகம்
உத்தனப்பள்ளி அருகே விபத்தில் தோட்டக்கலைத்துறை அதிகாரி பலி மனைவியின் பிரசவத்திற்காக சென்றபோது நேர்ந்த சோகம்
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே மனைவியின் பிரசவத்திற்காக சென்றபோது விபத்தில் தோட்டக்கலைத்துறை அதிகாரி பலியானார்.
உதவி அலுவலர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகனூரை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தோட்டக்கலைத்துறையில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இவர்கள் ஓசூரில் உள்ள அலசநத்தம் பகுதியில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சாந்தி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாந்தி பிரசவத்திற்காக தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே பள்ளப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ தேதி கொடுக்கப்பட்டு இருந்தது.
பலி
இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக நரசிம்மமூர்த்தி நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது உத்தனப்பள்ளி அருகே சானமாவு என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான நரசிம்மமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதற்கிடையே சாந்திக்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்தது. விபத்தில் நரசிம்மமூர்த்தி பலியான தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை காண சென்ற தோட்டக்கலைத்துறை அதிகாரி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story