கே.வி.குப்பம் அருகே புதிய பள்ளி கட்டிடத்தை திறக்கக் கோரி மாணவர்கள் சாலை மறியல்
கே.வி.குப்பம் அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அருகே புதிய பள்ளிக்கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ- மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரூ.1¾ கோடியில் புதிய கட்டிடம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா தேவரிஷிகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு அந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து 4 ஆண்டுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளிக்கான கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, சாலை வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பள்ளிக் கட்டிடம் செயல்படத் தயார் நிலையில் இருந்தும் இதுவரை திறக்கப்படவில்லை. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 121 மாணவர்கள் உட்கார இடம் இல்லாமலும், கழிவறை வசதி இல்லாமலும், ஒரே அறையில் பயின்று வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிக் கட்டிடத்தை உடனடியாகத் திறக்கக் கோரிக்கை வைத்து வந்தனர்.
மாணவ- மாணவிகள் மறியல்
ஆனால் புதிய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்காததால் நேற்று மாணவ-மாணவிகள் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாற்று மாற்று புதிய பள்ளிக்கட்டிடத்திற்கு மாற்று என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்தவாறு கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளித்தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் புதிய பள்ளிக் கட்டிடத்தில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட விடுபட்டுள்ள சில பணிகளை முடித்து ஒருவாரத்தில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு திரும்பினர்.
புதிய பள்ளி கட்டிடத்தை திறக்கக்கோரி மாணவ-மாணவிகள் மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story