ஆதனக்கோட்டை, வம்பனில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 68 பேர் காயம்


ஆதனக்கோட்டை, வம்பனில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 68 பேர் காயம்
x
தினத்தந்தி 24 March 2022 11:43 PM IST (Updated: 24 March 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஆதனக்கோட்டை, வம்பனில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்தனர்.

ஆதனக்கோட்டை:
ஜல்லிக்கட்டு 
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் மோட்டு முனீஸ்வரர், இச்சடி முனீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
42 பேர் காயம்
தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, திருப்பத்தூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த 690 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 
காளைகள் முட்டியதில் 42 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு பொருட்கள்
 ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளிநாணயம், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிகட்டில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 
இந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையுடன், நாயும் சேர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வம்பன்
திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இக்கோவில் திருவிழாவையொட்டி வம்பனில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு போட்டிப்போட்டு காளைகளை அடக்கினர். 
இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை,, திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகள் முட்டியதில் 26 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
சிறப்பு பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், ஆடுகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய இரண்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 
இதில் திருவரங்குளம், வம்பன் சுற்றுவட்டார  பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாஞ்சான் விடுதி கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீசார் செய்திருந்தனர்.

Next Story