இளம்பெண் பாலியல் பலாத்காரம்:சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை-அண்ணாமலை பேட்டி


இளம்பெண் பாலியல் பலாத்காரம்:சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை-அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 24 March 2022 11:59 PM IST (Updated: 24 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

விருதுநகர், 

விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லை என்றால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

 ஆர்ப்பாட்டம் 

விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் சாத்தூர் ரோட்டில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகரில் 22 வயதான இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருவருக்கு இதில் தொடர்புள்ளது. தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் இச்சம்பவம் பற்றி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.ஐ.க்கு மாற்றுவோம் 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இந்த வழக்கு விசாரணை இந்தியாவுக்கு முன்னுதாரணமாக அமையும் என்று அறிவித்தார். பாரதீய ஜனதா, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை சரியில்லாதபட்சத்தில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற பாரதீய ஜனதா நடவடிக்கை எடுக்கும்.
 மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்குவதுடன் பெண்ணின் பெயரில் வைப்பு நிதிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவிலேயே அதிக ஊழல் மிகுந்த அமைப்பாக தமிழக மின்வாரியம்தான் உள்ளது. வங்கி இருப்பு ரூ.33 கோடி கூட இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு 4 ஆயிரத்து 472 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

 கச்சத்தீவு பிரச்சினை

 கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தம் என்று இலங்கை சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கடந்த 1976-ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். அதனால்தான் தமிழக மீனவர்கள் கடலில் 4 கிலோ மீட்டர் தூரம் கூட சென்று மீன்பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ள இலங்கைக்கு, இந்தியா இதுவரை ஏராளமான நிதி உதவி வழங்கி உள்ளது. இதை தமிழ் மக்கள் வாழும் மாநிலங்களுக்கு செலவிட வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு நல்ல தீர்வை விரைவில் காண நடவடிக்கை எடுக்கும்.

பட்டாசு தொழில்

 தனி நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ததால் பட்டாசு தொழிலுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன. மத்திய அரசு பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசின் நீரி அமைப்பின் மூலம் 30 சதவீதம் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பதற்கான நடைமுறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீரி அமைப்பின் ரூ.8 கோடி நிதி,் பட்டாசு உரிமையாளர்கள் ரூ.3 கோடி என ரூ.11 கோடி மதிப்பீட்டில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான வழிமுறை குறித்த ஆய்வுக்கூடம் டெல்லி, நாக்பூர் மற்றும் சிவகாசியில் அமைய உள்ளது. இந்த ஆய்வுக் கூடம் விரைவில் செயல்பட தொடங்கும்.
பட்டாசு தொழில் உறுப்பினர்களுடன் டெல்லியில் சுற்றுப்புறச்சூழல் மந்திரி மற்றும் தொழில்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து சுற்றுப்புறச்சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி உள்ளேன். சிவகாசியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய தொலைநோக்குப் பார்வையுடன் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் விருதுநகர் மாவட்டம் மிக முன்னேறிய மாவட்டமாக உருவாகும். 
தற்போது ரஷியா-உக்ரைன் பிரச்சினையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக உள்ளது. அடுத்து பிரச்சினை ஏற்பட்டால் கச்சா எண்ணெய் 200 டாலராக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதே போல் எத்தனால் கலந்து பெட்ரோல் வினியோகம் செய்யப்படும் நிலையில், பெட்ரோல் விலை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

குடும்ப ஆட்சி 

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மதுபான ஆலைகள் வைத்துள்ளதால் விவசாயிகள் கள் இறக்க அனுமதி தர மறுக்கும் நிலை தொடர்கிறது. தமிழகத்திலும் தெலுங்கானாவிலும்தான் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கட்சித் தலைவராகவும் முதல்-அமைச்சராகவும், மற்ற முக்கிய பதவிகளிலும் செயல்படுவது ஏற்புடையதல்ல.
 விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் டெல்லியில் ராகுல்காந்தி அருகில் முகாமிட்டுள்ளார். தொகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியது அவசியமாகும் என்பதை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story