தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பகுதி
உடைந்து கிடக்கும் இருக்கைகள்
திருவண்ணாமலை நகரில் பெரியார் சிலை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் இருந்த இரும்பு இருக்கைகள் உடைந்து கிழே விழுந்து கிடக்கின்றன. மேலும் அங்கிருந்த சில இருக்கைகள் காணாமல் போய் உள்ளது. இதனால் வெயிலில் நடந்து வரும் பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் இல்லாததால் அமரமுடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிழற்குடையில் இருக்கைகள் அமைத்து தர வேண்டும்.
-அரி, திருவண்ணாமலை.
பழுதான பூங்கா மின் விளக்குகள்
வேலூர் மாநகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட விருதம்பட்டு ஸ்ரீராம் நகரில் ரூ.65 லட்சத்தில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இரவு நேரத்திலும் பொதுமக்கள் சென்றுவரும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மின்விளக்குகள் அனைத்தும் பழுதாகி நீண்ட நாட்களாக சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் பூங்காவுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. பழுதான மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?
-செந்தில், விருதம்பட்டு.
குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஷேசன்னராவ் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான பகுதி உள்ளது. இந்த பகுதியை பல வருடங்களாக சிலர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். அதோடு திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்துகிறார்கள். இதனால் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.
-முத்துவள்ளி, ஆற்காடு.
சேதமடைந்த மின்கம்பம்
வேலூர் மாநகராட்சி 23-வது வார்டு அலமேலுமங்காபுரம் புதிய தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
-ஆர்.எம்.சரவணன், அலமேலுமங்காபுரம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருப்பத்தூர் கோர்ட்டு நுழைவுவாயில் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி வருகிறது. கோர்ட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்துசெல்கின்றனர். அவர்கள் துர்நாற்றம் மற்றும் கொசுவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உடனடியாக கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்து, மருந்து தெளிக்க வேண்டும்.
-நீலவேணி ராஜீவ்காந்தி, திருப்பத்தூர்.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
காட்பாடியில் இருந்து ராணிப்பேட்டை வரையில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ்சில் பயணம் செய்து பள்ளி, கல்லூரிக்கு வருகிறார்கள். இவர்கள் மாலையில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் வேளையில் போதிய பஸ்வசதி இல்லை. பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவ- மாணவிகளின் நலன்கருதி மாலையில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.
-பி.துரை, காட்பாடி.
ஆபத்தான சுற்றுச்சுவர்
வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜாப்ராபாத் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிைலப்பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே வகுப்பறை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், ஆலங்காயம்.
கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்
திருவண்ணாமலை வேங்கிக்கால் மின் நகர் 5-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் செல்கிறது. கால்வாய் அமைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன்கருதி உடனடியாக கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.சின்னதுரை, வேங்கிக்கால்.
Related Tags :
Next Story