நாமக்கல்லில் உலக காசநோய் தின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில் உலக காசநோய் தின விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 March 2022 12:19 AM IST (Updated: 25 March 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதனை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்:
சைக்கிள் ஊர்வலம்
நாமக்கல்லில் நேற்று உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தி ஸ்பெக்ட்ரம் அகாடமி, தி ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 300 மாணவ, மாணவிகள் காசநோய் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மணிக்கூண்டு, திருச்சி சாலை வழியாக சென்று முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கத்தில் உலக காசநோய் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் காசநோய் பற்றிய விளக்க கையேடு வெளியிடப்பட்டது.
வெண்கல பதக்கம்
மேலும் உலக காசநோய் தினத்தையொட்டி பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் காசநோய் மையத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி கலெக்டர் ஸ்ரேயாசிங் கேடயம் வழங்கினார். மேலும் தன்னார்வலர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
2021-ம் ஆண்டில் 20 சதவீதம் காசநோய் தொற்று குறைக்கப்பட்ட மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெண்கல பதக்கத்தை பெற்று உள்ளதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் ராஜ்மோகன், துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன், துணை இயக்குனர் (குடும்பநலம்) வளர்மதி, துணை இயக்குனர் (தொழுநோய்) ஜெயந்தினி, தி ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி தாளாளர் விக்னேஷ், முதல்வர் சுந்தரமகாலிங்கம் மற்றும் மாணிக்கம்பாளையம் அரசு பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பள்ளி மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story