போதைப்பொருட்கள் கடத்திய வழக்கில் 5 பேர் கைது
நாட்டறம்பள்ளி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரில் போதைப்பொருள் கடத்தல்
நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்தின் பேரில் கார் நின்றது. போலீசார் சென்று விசாரித்தபோது காரில் இருந்துவர்கள் காரில் தப்பி சென்றனர். உடனே போலீசார் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காரை விரட்டிச்சென்று மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
காரை சோதனை செய்தபோது அதில் 26 மூட்டைகளில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது. அதனை காருடன் போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப் படை அணைக்கப்பட்டு போதைப் பொருட்கள் கடத்தியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
5 பேர் கைது
இந்தநிலையில் நேற்று காலை வாணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி அருகே முகமது அலி பஜார் பகுதியை சேர்ந்த ஜீகார்ஜி மகன்கள் தினேஷ் சவுத்திரி (வயது 28), ஜீகேந்திரகுமார் (25), சூளகிரி பகுதியை சேர்ந்த விஜயா ராம் மகன் அசாராம் (26), ஓசூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (32), விவேக் (22) என்பதும், போதைப்பொருள் கடத்திய காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார் டிரைவர் பிரகாஷ் சவுத்திரியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story