இடியும் நிலையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக கட்டிடத்தை அகற்ற உத்தரவு
தஞ்சை பெரிய கோவில் அருகே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக கட்டிடத்தை 3 நாட்களுக்குள் இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான நோட்டீசையும் அந்த கட்டிடத்தில் அதிகாரிகள் ஒட்டினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் அருகே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்க அலுவலக கட்டிடத்தை 3 நாட்களுக்குள் இடித்து அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான நோட்டீசையும் அந்த கட்டிடத்தில் அதிகாரிகள் ஒட்டினர்.
64 ஆண்டு கால கட்டிடம்
தஞ்சை பெரிய கோவில் மேம்பாலம் அருகே மிருகவதை தடுப்பு சங்க அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 1958-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 64 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் ஆய்விலும் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதால் இதனை உடனடியாக இடித்து அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பான நோட்டீசை உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் எட்வின்சுரேஷ் ஆகியோர், அந்த கட்டிடத்தின் கதவில் ஒட்டினர். மேலும் மிருகவதை தடுப்பு சங்க செயலாளரிடமும் இது தொடர்பான நோட்டீசு வழங்கப்பட்டது.
3 நாட்களுக்குள் அப்புறப்படுத்துங்கள்
அந்த நோட்டீசில், “பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடம் அந்த வழியாக செல்பவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே கட்டிடத்தை எந்தவித உபயோகத்துக்கும் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுமக்களுக்கும், கட்டிட உள்ளிருப்போருக்கும் ஆபத்து ஏற்படாதவாறு கட்டிடத்தை தகுந்த முன்னேற்பாடுகளுடன் அறிவிப்பு கிடைத்த 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்துமாறு அறிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லணைக்கால்வாய் கரையில் சாலை
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தஞ்சை பெரிய கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது. இருப்பினும் விழா காலங்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மிருகவதை தடுப்பு சங்க கட்டிடம் உள்ள இடத்தின் வழியாக கல்லணைக்கால்வாயின் இருபுறமும் சாலை அமைத்து அந்த சாலை காந்திஜி சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு அமைத்தால் பெரியகோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. விழா காலங்களில் எந்தவித இடையூறும் இன்றி வாகனங்கள் இதே போன்று தற்போது கட்டப்பட்டு வரும் இர்வின் பாலம் அருகே உள்ள ராணி வாய்க்காலும் கட்டப்பட்டு அதன் மீது சாலை வசதி செய்து பர்மாபஜார், அகழி வழியாக வெள்ளைப்பிள்ளையார் கோவில் பாலத்தை இணைக்கும் வகையிலும் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.
Related Tags :
Next Story