திருப்பரங்குன்றம் அருகே காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது


திருப்பரங்குன்றம் அருகே காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 March 2022 2:04 AM IST (Updated: 25 March 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 360 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே காரில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 360 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் ஆஸ்டின்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக தெரிகிறது. 
இதனையடுத்து போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காருக்குள் 2 கிலோ கொண்ட 10 பண்டல்களில் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர். இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை செய்தனர். அதில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கார்கள் மூலம் அடிக்கடி கஞ்சா கடத்தி வந்ததும், கப்பலூர் காந்திநகரில் உள்ள குடோனில் கஞ்சாவை பதுக்கி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. எனவே கப்பலூர் காந்திநகர் குடோனை போலீசார் உடனடியாக சோதனையிட்டனர்.
மேலும் 340 கிலோ
அந்த குடோனில் 161 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 340 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மதுரை கூடல்நகரை சேர்ந்த தெய்வம்(வயது47), காளப்பன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார்(40), கப்பலூரை சேர்ந்த ரமேஷ் (35), மதுரை தினமணி நகரை சேர்ந்த ராஜேந்திரன் (55) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை.யும் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தியவர்களிடம் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனும் விசாரணை நடத்தினார்.

Next Story