போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் குருநாதன் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் ரஞ்சித்குமார்(வயது 22). இவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்து சென்னையில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் வெண்ணையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தனின் மகள் ஆர்த்தி(21) என்பவருக்கும் புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டபோது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. ஆர்த்தி, புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர்களது காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 21-ந் தேதி ரஞ்சித்குமார், ஆர்த்தியை சென்னைக்கு அழைத்துச்சென்று அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோடாக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஆர்த்தியின் பெற்றோர், தங்களது மகளை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடந்தது அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து காதல் திருமண ஜோடி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி, இருவரின் பெற்றோர்களையும் அழைத்து விசாரித்தார். இதையடுத்து ஆர்த்தியின் பெற்றோர், அவரை தங்களுடன் வருமாறு அழைத்தபோது, ரஞ்சித்குமாருடன் செல்வதாக ஆர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார், ரஞ்சித்குமார் மற்றும் அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறி ஆர்த்தியை அவர்களுடன் என்னை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story