சித்திரை திருவிழா ஏற்பாடுகள் ஆலோசனை கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
மதுரை சித்திரை திருவிழா
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம், 15-ந் தேதி தேர் திருவிழாவும், நடக்கிறது. மேலும் 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று மாலை அழகர்கோவிலில் இருந்து அழகர் கள்ளழகர் வேடம் அணிந்து மதுரை நோக்கி வருகிறார். அதன்படி 15-ந் தேதி அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா 16-ந் தேதி நடக்கிறது. 17-ந் தேதி மதியம் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், இரவு தசாவதார நிகழ்ச்சிகளும், 19-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், 20-ந் தேதி கள்ளழகர் கோவிலை சென்றடைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
ஆலோசனை கூட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு, சுகாதாரப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மீனாட்சி கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் அனிதா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மீனாட்சி கோவில் திருவிழாவில் வீதி உலா, அழகர் புறப்பாடு மற்றும் எதிர்சேவையின் போது நடமாடும் வாகன கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பது, கள்ளழகர் எழுந்தருளுவதற்காக வைகையாற்றில் நீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Related Tags :
Next Story