சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம்: காரின் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
சங்கரன்கோவிலில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (வயது 42). லாரி உரிமையாளர். இவர் தனது லாரியில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த உறவினரான பெரியராஜ் மனைவி மகாராசியிடம் (32) கடன் கேட்டார்.
இதையடுத்து மகாராசி நகைகளை அடமானம் வைத்து பணம் வழங்குவதற்காக நேற்று தனது காரில் ரவிகுமாரை அழைத்து சென்றார். சங்கரன்கோவில் தனியார் நிதி நிறுவனத்தில் மகாராசி நகைகளை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்று ரவிகுமாரிடம் வழங்கினார். பணத்தை பெற்று கொண்ட ரவிகுமார் அதனை கைப்பையில் வைத்து கொண்டு மகாராசியுடன் காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
திருட்டு
பின்னர் அவர்கள் சங்கரன்கோவில்- திருவேங்கடம் ரோடு வாணியர் ஊருணி அருகே உள்ள கரும்புச்சாறு கடைக்கு எதிர்புறம் காரை நிறுத்தி விட்டு கரும்புச்சாறு குடிக்க சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நைசாக காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, காருக்குள் ரூ.3 லட்சத்துடன் இருந்த கைப்பையை திருடிச் சென்றனர்.
சிறிதுநேரத்தில் திரும்பி வந்த ரவிகுமார், மகாராசி ஆகியோர், காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை
ரவிகுமார், மகாராசி ஆகிய 2 பேரும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சத்தை பெற்று வந்ததை அறிந்து நோட்டமிட்ட பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் கைவரிசை காட்டியதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் காரின் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சத்தை மர்மகும்பல் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story