கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 144 பேருக்கு காசநோய்-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்


கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 144 பேருக்கு காசநோய்-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
x
தினத்தந்தி 25 March 2022 2:50 AM IST (Updated: 25 March 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 144 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்

பெங்களூரு: கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 144 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

144 பேருக்கு காசநோய்

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் உலக காசநோய் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு அந்த விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நாட்டில் முதல் முறையாக கர்நாடகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை 25 லட்சம் பேருக்கு இ்ந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 144 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இந்த காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாலையில் காய்ச்சல்

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு காசநோய் ஏற்பட்டு இருப்பது குறித்து ஒரு விவரமான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். காசநோய் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க கர்நாடகம் உறுதி பூண்டுள்ளது. காசநோய் பாக்டீரியா மூலம் பரவுகிறது. உலக சுகாதார நிறுவனம், வருகிற 2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது டாக்டர்கள் மற்றும் அரசால் மட்டுமே சாத்தியமில்லை. இந்த இலக்கை அடைய அரசுடன் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். நோய் அறிகுறி தெரிய ஆரம்பித்தவுடன் சிகிச்சை தொடங்க வேண்டும். 2 வாரத்திற்கு மேல் தொடர்ந்து இருமல் இருப்பது, மாலையில் காய்ச்சல் வருவது, திடீரென உடல் எடை குறைவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய் பரவும் வாய்ப்பு

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காசநோய் பரிசோதனை செய்யும் ஆய்வகம் உள்ளது. தொடக்க நிலையிலேயே காசநோயை கண்டறிந்தால் சிகிச்சை நல்ல முறையில் வழங்க முடியும். கிராமப்புறங்களில் பொதுமக்கள் நோய் அறிகுறி இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது இல்லை. ஒரு காசநோயாளி மூலம் 10 பேருக்கு அந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.
அதனால் நோய் பாதிப்பு உள்ளவர் அலட்சியமாக இருந்தாலும் அதன் மூலம் அது பெரிய அளவில் பரவும். 

அதனால் காசநோய் குறித்து மக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.  வீட்டில் ஒருவருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு சுதாகர்  கூறினார்.



Next Story