‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
x
தினத்தந்தி 25 March 2022 2:56 AM IST (Updated: 25 March 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு நடேசர் மில் பகுதியில் உள்ள ரோட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சில நேரங்களில் குப்பைகளை அங்கேயே எரிக்கவும் செய்கிறார்கள். உடனே குப்பைகளை அள்ளவும், கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு

ஆபத்தான பள்ளம்
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூடி அமைக்கப்பட்டு உள்ள 2 இடங்களில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும், அந்த மூடியின் கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த பள்ளத்தால்  வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் முன்னால் பெரிய வாகனங்கள் செல்லும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்துவிட நேரிடுகிறது. எனவே ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர், ஈரோடு.

வழிகாட்டி பலகை வேண்டும்
புங்கம்பள்ளியில் இருந்து பனையம்பள்ளி செல்லும் வழியில் சுங்ககாரன்பாளையம் எல்லையில் ஒரு வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் புங்கம்பள்ளி, பனையம்பள்ளி, குரும்பபாளையம், தேசிபாளையம் செல்லும் வழி பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த பலகையை காணவில்லை. இதனால் வெளியூரில் இருந்து வருபவர்கள் அவதிப்படுகிறார்கள். அதனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் அங்கு மீண்டும் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும்.
மாரப்பன், தேசிபாளையம்.

குண்டும், குழியுமான ரோடு
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் திரு.வி.க. வீதி அருகே உள்ள ரோடு குண்டு்ம் குழியுமாக காணப்படுகிறது. அதன் அருகே பள்ளிக்கூடம் உள்ளது. இந்த ரோடு வழியாக சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மொடச்சூர்.



நடுரோட்டில் மின்கம்பம்
சென்னிமலை பேரூராட்சியில் 12-வது வார்டுக்கு உள்பட்ட காட்டூர் பகுதியில் தற்போது புதிதாக தார் ரோடு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலையின் நடுவில் மின் கம்பம் உள்ளது. எனவே மின்கம்பத்தை அகற்றி ரோட்டோரமாக நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், காட்டூர்.

படித்துறை வேண்டும்
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் தினமும் சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து வருகின்றனர். மேலும், அமாவாசை உள்ளிட்ட தினங்களில் ஏராளமானவர்கள் காவிரிக்கரையில் தர்ப்பணம், திதி கொடுத்து வருகிறார்கள். கோவில்களின் திருவிழாவையொட்டி தீர்த்தம் எடுக்க வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடிவிட்டு கோவிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்வது வழக்கம். அங்கு படித்துறை இல்லாததால் தண்ணீரின் ஆழம் பக்தர்களுக்கு தெரிவதில்லை. எனவே காவிரிக்கரையில் படித்துறை அமைக்க வேண்டும்.
சரண்யா, கருங்கல்பாளையம்.

ஆபத்தான குழி
ஈரோடு மூலப்பட்டறை பவானி ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. அதில் வாகனங்களின் டயர் சிக்காமல் இருக்க பெரிய கல் போடப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணபெருமாள், ஈரோடு.


Next Story