2 ஆயிரத்து 616 பேருக்கு காசநோய் சிகிச்சை
திருச்சி அரசு மருத்துவமனையில் 2 ஆயிரத்து 616 பேருக்கு காசநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக டீன் வனிதா கூறினார்.
திருச்சி
உலக காசநோய் தினத்தையொட்டி பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை டீன் வனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் காசநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டது. அரசு மருத்துமனையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா வரை சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காசநோய் சிகிச்சை
பின்னர் டீன் வனிதா பேசுகையில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையின்போது ஊட்டச்சத்து கிடைத்திட அரசு சார்பில் ரூ.500 நிதி உதவி வழங்கப்படுகிறது. திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 54 ஆயிரத்து 406 பேருக்கு காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நோய் உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 616 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
முறையான முழுமையான மருத்துவ சிகிச்சை தான் காசநோய் ஒழிப்பிற்கான நிரந்தர தீர்வு என்பதை அனைவரும் உணர வேண்டும். காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் காசநோயின் சிகிச்சையை இடையில் நிறுத்தக் கூடாது. அது மிகவும் ஆபத்தானதாகும்' என்றார்.
Related Tags :
Next Story