பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு


பஜ்ரங்தள பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 25 March 2022 4:16 AM IST (Updated: 25 March 2022 4:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் நடந்த பஜ்ரங்தள பிரமுகர் கொைல வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

சிவமொக்கா: சிவமொக்காவில் நடந்த பஜ்ரங்தள பிரமுகர் கொைல வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஹர்ஷா கொலை

சிவமொக்கா டவுன் சி.கே.கட்டியை சேர்ந்தவர் ஹர்ஷா. பஜ்ரங்தள அமைப்பு பிரமுகரான இவரை கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதி இரவு மர்மநபர்கள் படுகொலை செய்தனர். இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இதனால் அந்தப்பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. 

இதனால் சிவமொக்கா மாவட்டத்தில் சில நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இந்த நிலையில், ஹர்ஷா கொலை தொடர்பாக வெளிமாநிலத்தில் இருந்து திட்டமிடப்பட்டதாகவும், இதன் பின்னணியில் பலர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. 

என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவு

இதுதொடர்பாக தொட்டபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ஹர்ஷா கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்ற வேண்டும் என்று மந்திரி ஈசுவரப்பா, சி.டி.ரவி எம்.எல்.ஏ., மத்திய மந்திரி ஷோபா ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். 
மேலும், ஹர்ஷா கொலையில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனால் பஜ்ரங்தள பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை தொடர்பான ஆவணங்களை போலீசார், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைவில் சிவமொக்காவுக்கு வந்து விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.

Next Story