அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கருப்பு சின்னம் அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு மாதம் தோறும் வழங்கப்பட வேண்டிய சம்பளம் அந்தந்த மாதங்களில் வழங்கப்படாமல் காலம்கடந்தே வழங்கப்பட்டு வருகிறது.
கோரிக்கைகள்
இந்த நிலையில் ஆலைத்தொழிலாளர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆலைத்தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஆலைத்தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகை பல மாதங்களாக பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல் நிலுவை உள்ளது.
அதனால் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைப்பது தாமதமாகிறது. அதனால் பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய நிலுவைத்தொகையை அந்த அலுவலகத்திற்கு ஆலை நிர்வாகம் செலுத்தவேண்டும்.
கடனுக்கு வட்டி கூடுகிறது
அதேபோன்று சர்க்கரை ஆலைத்தொழிலாளர் சிக்கன சேமிப்பு கடன் சங்கத்தில் இருந்து கடன்பெற்ற தொழிலாளர்களின் கடனுக்கான தொகை ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டும், அந்த கடன் தொகை அந்தசங்கத்திற்கு செலுத்தப்படாமல் நிலுவைஉள்ளது. அதனால் அந்த தொழிலாளர்கள் பெற்றகடனுக்கான வட்டிதொகை கூடுகிறது.
அதனால்அந்த தொகையை, கடன் பெற்ற தொழிலாளர்களின் பெயரில் அந்த கடன் சங்கத்திற்கு செலுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகத்தால் வழங்கப்படவேண்டிய பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும். சர்க்கரை ஆலை மற்றும் இந்த ஆலையின் சார்பு நிறுவனமான வடிப்பாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்ட சிலகோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்த ஆலையின் அனைத்துதொழிற்சங்ககூட்டுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஆலைத்தொழிலாளர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து பணிக்கு சென்றனர். முன்னதாக அவர்கள், ஆலையின் முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story