கயத்தாறு அருகே: நகைக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 2-வது நாளாக பெண்கள் போராட்டம்
கயத்தாறு அருகே நகைக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 2 வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
கயத்தாறு:
கயத்தாறு அருகே நகைக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நகைக்கடன் தள்ளுபடி
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஏராளமானவர்கள் நகை அடமானம் வைத்தனர். ஒரே நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் நகைகளை அடமானம் வைத்ததால், அவர்களுக்கு பணம் வழங்காமல், அவர்களது வங்கி கணக்கில் விரைவில் கடன்தொகை வரவு வைக்கப்படும் என்று உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டது.
ஆனால் இன்னும் அவர்களது வங்கி கணக்கில் நகைக்கடன் தொகை வரவு வைக்கப்படவில்லை என்றும், ஆனால் நகைக்கடனுக்கான வட்டியை செலுத்துமாறு நோட்டீசு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு, தங்களது நகைக்கடனை தள்ளுபடி செய்து, நகைகளை திருப்பித்தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின்பேரில், வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.
2-வது நாளாக போராட்டம்
இந்த நிலையில் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை ஏராளமான பெண்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் நேற்று காலையில் 2-வது நாளாக முற்றுகையிட்டு ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வில்லிசேரியில் நெல்லை-மதுரை நாற்கரசாலையில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட வாடிக்கையாளர்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்குவதற்காக புறப்பட்டு சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கயத்தாறு அருகே நகைக்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story