மத்திய மந்திரி நாராயண் ரானே மீது நடவடிக்கை- ஜனாதிபதிக்கு திஷா சாலியனின் பெற்றோர் கடிதம்
மகளின் மரணம் குறித்து அவதூறு பரப்பி வரும் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திஷா சாலியனின் பெற்றோர் கடிதம் எழுதி உள்ளனர்.
மும்பை,
மகளின் மரணம் குறித்து அவதூறு பரப்பி வரும் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு திஷா சாலியனின் பெற்றோர் கடிதம் எழுதி உள்ளனர்.
அவதூறு பரப்பிய ரானே
இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன். இவர் 2020-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி மலாடு பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் ஜூன் 14-ந் தேதி சுஷாந்த்சிங் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். எனவே 2 பேரின் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்தநிலையில் சமீபத்தில் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் நிதேஷ் ரானே எம்.எல்.ஏ. ஆகியோர் திஷா சாலியன் மரணம் குறித்து பரபரப்பு தகவல்களை தெரிவித்தனர். இதுகுறித்து 2 பேர் மீதும் அவதூறு பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜனாதிபதிக்கு கடிதம்
இந்தநிலையில் திஷா சாலியன் மரணம் குறித்து அவதூறு பரப்பி வரும் நாராயண் ரானே, நிதேஷ் ரானே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது பெற்றோர் சதீஷ், வசந்தி சாலியன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
அவர்கள் எழுதி உள்ள கடிதத்தில், "எங்களது மகளின் மரணம் மற்றும் அதன்பிறகு நாராயண் ரானே போன்றவர்களால் பரப்பப்பட்ட இந்த அப்பட்டமான பொய் காரணமாக எங்கள் வாழ்க்கை ரணமாகி உள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் மத்திய மந்திரி நாராயண் ரானே, அவரது மகன் எங்களது பெயரை களங்கப்படுத்துவதை நிறுத்தவில்லை. எங்களது அடிப்படை உரிமையான வாழ்வுரிமை, தனியுரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை விட பொய்யை பரப்பும் அவர்களின் உரிமையே முக்கியம் என்பதால் நாங்கள் உயிரோடு வாழும் வரை எங்களுக்கு நீதி கிடைக்காது என தோன்றுகிறது. எனவே நீதியை நிலை நாட்ட நீங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், அல்லது எங்களது வாழ்க்கையை முடித்து கொள்வதை தவிர வேறு வழியில்லை " என கூறியுள்ளனர்.
----
Related Tags :
Next Story