பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு வழங்கிய நிலப்பத்திரம் ரத்து
கண்டாச்சிபுரத்தில் பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு வழங்கிய நிலப்பத்திரம் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம்,
கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 75), விவசாயி. இவர் தனது மனைவி சாந்தகுமாரி (65), மகள் தேவசேனா (40) ஆகியோருடன் கடந்த 23-ந் தேதி இரவு கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் வந்து ராஜமாணிக்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனக்கு சொந்தமாக நல்லாப்பாளையத்தில் 10 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை எனது மகன் பிரபாகரனுக்கு கடந்த 2009-ல் தானசெட்டில்மெண்ட் செய்து கொடுத்தேன். அவர் கடந்த ஓராண்டாக எங்களை பராமரிக்கவில்லை. எனவே நாங்கள் எங்கள் மகனுக்கு வழங்கிய நிலப்பத்திரத்திற்கான தானசெட்டில்மெண்டை ரத்து செய்து அந்த நிலத்தை எங்களிடமே திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அலுவலர்கள் ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். பின்னர் அவரது குடும்பத்தினர், உறவினர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரபாகரன் அவரது பெற்றோரை பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனுக்கு அவரது பெற்றோர் அளித்த நிலத்திற்கான தானசெட்டில்மெண்டை பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் கீழ் ரத்து செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன் பிறகு அதற்கான உத்தரவு ஆணை ராஜமாணிக்கத்திடம் வழங்கப்பட்டது. கலெக்டரின் இந்த உடனடி நடவடிக்கையை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story