திருச்செந்தூரில் ரூ.3.95 கோடியில் தினசரி மார்க்கெட் கட்ட இடம் தேர்வு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
திருச்செந்தூரில் புதிதாக தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் ரூ.3.95 கோடி மதிப்பில் புதிதாக தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தினசரி மார்க்கெட்
திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி தினசரி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் தற்போது குடிசை மற்றும் ஆஸ்பெட்டாஸ் சீட்டினால் உள்ளது. இந்நிலையில் தற்போது உள்ள மார்க்கெட்டின் வடக்கு பகுதியில் ரூ.3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதிதாக 148 கடைகள் காங்கிரீட் கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளைமறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
புதிதாக கடைகள் கட்டப்படும் இடத்தை நேற்று தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதே இடத்தில் கூடுதலாக 148 கடைகள் அமைப்பதற்கும், அதே பகுதியில் புதிதாக ஆம்னி பஸ்நிலையம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் திருச்செந்தூர் கீழப்புதுத்தெருவில் இருந்து எடிசன் ஆஸ்பத்திரி அருகில் உள்ள கால்வாய் வரை பாதாள சாக்கடைத்திட்ட பணிக்காக புதிதாக குழாய் அமைப்பதற்கு உடனடியாக திட்ட மதிப்பீடு செய்து, அப்பணியை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து 3 திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், நகராட்சி ஆணையாளர் வேலவன், பொறியாளர் (பொறுப்பு) ஹாசினா, பணிமேற்பார்வையாளர் (பொ) சுதாகர், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, அரசு வக்கீல் சாத்ராக், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, சோமசுந்தரி, மகேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி துணை அமைப்பாளர் பொன்முருகேசன், காங்கிரஸ் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வேல்ராமகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தென்திருப்பேரை
தென்திருப்பேரை, குரும்பூர் ஆகிய இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இரண்டு ஊர்களில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதனால் நாலுமாவடி, பணிக்கநாடார் குடியிருப்பு, தென்திருப்பேரை, குருகாட்டூர், கோட்டூர், மேலக்கடம்பா, மாவடிபண்ணை மற்றும் குரங்கணி அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் பயனடைவர். தொடர்ந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தெற்கு கோட்டூர் அருகே உள்ள குட்டியலகனூரில் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் திறந்து வைத்து, அதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், தென்திருப்பேரை நகர பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை ஆனந்த், ஒன்றிய துணைச்செயலாளர் கோயில் துரை, தென்திருப்பேரை நகர செயலாளர் முத்துவீரபெருமாள், நகர பஞ்சாயத்து உறுப்பினர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story