லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது
தாராபுரம் அருகே நில உச்சவரம்பு சட்டத்தில் வழங்கப்பட்ட இடத்தை வீட்டுமனை பட்டாவாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நில உச்சவரம்பு
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அந்த பகுதியில் பிரிண்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய தந்தை கருப்பணதேவருக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரம் தேவநல்லூர் பகுதியில் 2.18 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பண தேவர் இறந்து விட்டார். இதற்கிடையில் தானமாக வழங்கப்பட்ட நிலத்தை 25 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டுமனை பட்டாவாக மாற்றிக் கொள்ளலாம் என்ற விதி முறையின் அடிப்படையில் அந்த நிலத்தை வீட்டுமனையாக மாற்ற ராஜேந்தின் முடிவு செய்தார். இதற்காக தடையில்லா சான்று பெற தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இவருடைய விண்ணப்பம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரூ.25 ஆயிரம் லஞ்சம்
அந்த விண்ணப்பத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் மகேந்திர வில்சன் வயது 45 பரிசீலனை செய்தார். பின்னர் அந்த நிலம் குறித்து விசாரிக்க அலுவலகம் வருமாறு ராஜேந்திரனை மகேந்திர வில்சன் அழைத்தார். இதையடுத்து விசாரணைக்காக தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு ராஜேந்திரன் சென்றார்.
அப்போது நில உச்சவரம்பு சட்டத்தில் அரசு தானமாக வழங்கிய நிலத்தை வீட்டுமனையாக மாற்றி பட்டா வழங்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று மகேந்திர வில்சன் கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன் ரூ.25 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த பணத்தையும் கொடுக்க மனமில்லாத ராஜேந்திரன் இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார்.
கையும், களவுமாக சிக்கினார்
அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்கள் ரூ.25 ஆயிரத்தை ராஜேந்திரனிடம் ஒப்படைத்து அதை அதிகாரி மகேந்திர வில்சனிடம் கொடுக்குமாறு கூறினார். அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு ராேஜந்திரன் தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் வந்தார். அங்கிருந்த வருவாய் முதுநிலை ஆய்வாளர் மகேந்திர வில்சனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மகேந்திர வில்சனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story