2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல்: சித்தராமையா போட்டியிடும் கடைசி தேர்தல்


2023-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல்: சித்தராமையா போட்டியிடும் கடைசி தேர்தல்
x
தினத்தந்தி 25 March 2022 9:15 PM IST (Updated: 25 March 2022 9:15 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு(2023) நடைபெறும் கர்நாடக சட்டசபை பொது தேர்தல்தான் தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். அதற்கு பிறகும் தனது அரசியல் பயணம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

மைசூரு:

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா

  முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூருவுக்கு வந்துள்ளார். அவர் மைசூருவில் உள்ள தனது சொந்த கிராமமான சித்தராமையனஉண்டி கிராமத்திற்கு சென்று அங்கு நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்றார். மேலும் தனது குடும்பத்தினருடன் பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  அடுத்த ஆண்டு(2023) கர்நாடக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல். தேர்தலில் தோல்வி அடைவேனோ, வெற்றி பெறுவேனோ என்பது முக்கியம் அல்ல. இருப்பினும் எனது அரசியல் பயணம் தொடரும்.

அரசியலில் புத்துயிர்

  தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதுபற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. வருணா, உன்சூர், சாமராஜ்பேட்டை, பாதாமி, கோலார், ஹெப்பால், கொப்பல் மற்றும் சாமுண்டீஸ்வரியில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் எனது ஆதரவாளர்கள் என்னை தங்களது தொகுதிகளில் போட்டியிடும்படி வலியுறுத்தி வருகிறார்கள். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை.

  நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். நான் எந்த தொகுதியில் இருந்து அரசியலில் புத்துயிர் பெற்றேனோ, அதே தொகுதியில் வீழ்த்தப்பட்டேன். அதற்காக சாமுண்டீஸ்வரி தொகுதி மக்களை நான் மறந்துவிட்டதாக அர்த்தம் இல்லை.

முதல்-மந்திரியாக...

  அவர்கள்தான் என்னை தேர்தலில் 5 முறை வெற்றிபெற செய்து நான் அரசியலில் இந்த அளவுக்கு உயர காரணமாக இருந்தவர்கள். தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அடுத்த முதல்-மந்திரியாக நீங்கள் தேர்தெடுக்கப்படுவீர்களா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். அதுபோன்று யாரிடமும் நான் கேட்கமாட்டேன். காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ? அதற்கு கட்டுப்படுவேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  கடந்த 2013 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை பொது தேர்தலின்போதும் இதுதான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சித்தராமையா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Next Story