கூடலூரில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்
கூடலூரில் சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் ஓடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
கூடலூர்
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட துப்புகுட்டிபேட்டை, கல்குவாரி, முத்தமிழ் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் இங்குள்ள சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி வருகிறது. பல வாரங்களாக கழிவுநீர் சாலையில் செல்வதால், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதன் மீது நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால்தான் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் அந்த கழிவுநீரை பீய்ச்சி அடித்துவிட்டு செல்வதால், அது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களின் மீது படுகிறது.
அத்துடன் சாலையில் ஓடும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையை ஒட்டி வசித்து வரும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கழீவுநீர் செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story