கீழடி அகழ்பொருள் வைப்பக கட்டிட பணி மே மாதம் நிறைவு பெறும்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி


கீழடி அகழ்பொருள் வைப்பக கட்டிட பணி மே மாதம் நிறைவு பெறும்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
x
தினத்தந்தி 25 March 2022 10:33 PM IST (Updated: 25 March 2022 10:33 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அகழ்பொருள் வைப்பக கட்டுமான பணி மே மாதத்தில் நிறைவுபெறும் என அங்கு நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

திருப்புவனம்,

கீழடியில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அகழ்பொருள் வைப்பக கட்டுமான பணி மே மாதத்தில் நிறைவுபெறும் என அங்கு நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அகழ்பொருள் வைப்பகம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் தற்போது 8-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த அகழாய்வுகளில் பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள், பானைகள் கீழடியில் வௌிப்பட்டுள்ளன. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூரிலும் அகழாய்வு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சி படுத்துவதற்காக கொந்தகை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், அகழ் பொருள் வைப்பகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 

அமைச்சர்கள் ஆய்வு

இந்த கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ேக.ஆர்.பெரியகருப்பன், மூர்த்தி நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், தளபதி ஆகியோரும் வந்திருந்தனர். 
ஆய்வுக்குப்பின் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
அகழ்பொருள் வைப்பகவும், அருங்காட்சியம் கட்டிட பணிகள் அழகாகவும், நேர்த்தியாகவும், பழமையை பறைசாற்றும் வகையிலும் அமைய வேண்டும் என எங்களுக்கு  முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். நான் ஏற்கனவே ஆய்வு செய்ய வந்த போது கட்டிட பணிகள் மிக தாமதமாக நடைபெறுவதை அறிந்தேன். எனவே பழைய ஒப்பந்ததாரருக்கு பதிலாக மாற்று ஒப்பந்ததாரரை நியமிக்க, பழைய ஒப்பந்ததாரர் ஒப்புதலுடன் முடிவு செய்தோம். தற்போது மிக நேர்த்தியாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்த்து பெருமைப்படுகிறேன். இந்த கட்டிடப் பணிகளுக்கு ஒதுக்கிய நிதி ஏறத்தாழ ரூ.11 கோடி ஆகும்.

மே மாதம் பணிகள் முடியும்

 ஏற்கனவே மார்ச் 30-ந் தேதிக்குள் கட்டிடப் பணிகளை முடிக்க கூறினேன். பணிகள் இன்னும் முடிவு பெறாததால் மே மாதம் 30-ந் தேதிக்குள் ஒப்பந்ததாரர் முடித்து தருவதாக கூறியுள்ளார். 
எனவே மே மாதம் பணிகள் நிறைவேறும் என நம்புகிறேன். இந்த அகழ் பொருள் வைப்பக கட்டிடத்தை பொறுத்த அளவில் 2966 சதுர மீட்டர் அளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையிலான பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு என பல தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீழடியில் தோண்டியெடுக்கும் பொருட்களை மையமாக வைத்துதான் தமிழன் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்படும் பொருட்களை தமிழர்கள் மட்டும் பார்க்க வருவதில்லை. வெளிமாநில மக்கள், வெளிநாட்டினர் என அனைவரும் பார்க்க வருவார்கள். இந்த அகழ் வைப்பக கட்டிடம்  கீழடி பகுதியிலேயே அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறினார். 

கலெக்டர்

ஆய்வின்போது சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, யூனியன் ஆணையாளர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கட சுப்ரமணியன், தீபலெட்சுமி ஜெயவேல் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story