இரிடியம் தருவதாக கூறியவரிடம் ரூ.3½ கோடியை இழந்த தொழில் அதிபர் தற்கொலை


இரிடியம் தருவதாக கூறியவரிடம் ரூ.3½ கோடியை இழந்த தொழில் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 March 2022 10:53 PM IST (Updated: 25 March 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

இரிடியம் வாங்கி தருவதாக கூறியவரிடம் ரூ.3½ கோடியை இழந்த தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

இரிடியம் வாங்கி தருவதாக கூறியவரிடம் ரூ.3½ கோடியை இழந்த  தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அவரது உறவினர்கள் சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.3½ கோடி மோசடி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவள்ளி நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 40). இவர் மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவருக்கு தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த கவுர் மோகன்தாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
அவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை ராஜீவ் காந்திக்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனது உறவினர்கள,் நண்பர்களிடம் என சேகரித்து ரூ3½ கோடியை ராஜீவ் காந்தி, கவுர் மோகன்தாசிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர் ஏமாற்றியதாகவும் தெரியவருகிறது. இது குறித்து ராஜீவ்காந்தி போலீசில் புகார் செய்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள்.

தற்கொலை

இந்த நிலையில் ராஜீவ்காந்திக்கு, பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த ராஜீவ் காந்தி கடந்த 22-ந்தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் ராஜீவ்காந்தி நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாலை மறியல்

 இந்த நிலையில் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரியும் ராஜீவ்காந்தி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் சூப்பிரண்டு அன்பு, துைண சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
-----------


Next Story