வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டியபோது 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்-ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
நாமக்கல்லில் வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டியபோது மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்களை ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
நாமக்கல்:
மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்
நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நிதி நிறுவன மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நல்லிபாளையத்தில் புதிதாக வீடு கட்ட விரும்பினார். அதன்படி வீட்டுக்கு அஸ்திவாரம் (கடக்கால்) அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக குழி தோண்டும் பணியில் முதலைப்பட்டியை சேர்ந்த சின்னுசாமி மற்றும் தாதம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் ஈடுபட்டனர்.
சுமார் 10 அடி ஆழம் குழி தோண்டியபோது எதிர்பாராத விதமாக திடீரென மண் சரிந்து சின்னசாமி, சுப்பிரமணி மீது விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் மண்ணில் புதைந்தனர்.
உயிருடன் மீட்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிதி நிறுவன மேலாளர் விஜயகுமார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் மீட்க முடியாததால் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக 2 தொழிலாளர்களையும் மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 2 பேரும் தடையில்லாமல் சுவாசிக்க நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக மண்ணை அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு 2 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் அருகே வீட்டுக்கு அஸ்திவாரம் தோண்டியபோது 2 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story