குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதம்
என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று கூறி கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த சில விவசாயிகள் என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைக்கும் பணிக்காக விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட இடத்திற்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. அதனால் இனி என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று கூறி கலெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள், விவசாயிகளை சமாதானப்படுத்தி ஒவ்வொருவராக தங்கள் குறைகளை தெரிவிக்கும்படி கூறினர்.
இதையடுத்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, மனு அளித்தனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
தண்ணீர் திறக்க வேண்டும்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாதவன் கூறுகையில், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500-ம், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பூவாலை, வயலாப்பூர், அலமேலுமங்காபுரம் கிராமங்களுக்கு நவரை பட்டத்திற்காக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து மானம் பாத்த வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட வேண்டும். கரும்பு விவசாயிகளை பாதிக்கும் வருவாய் பங்கீட்டு முறையை திரும்பப்பெற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என்றார்.
பரங்கிப்பேட்டை சரவணன் கூறுகையில், புவனகிரி சித்தேரி பகுதியில் சரியான வடிகால் வாய்க்கால் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஒரு மூட்டை உரம் வாங்கினால், திரவ (லிக்யூடு) மருந்தும் வாங்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்றார்.
வண்டல் மண்
விவசாயி செந்தில் கூறுகையில், ஏரியில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். குறைகேட்பு கூட்டத்திற்கு வரும் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்க வேண்டும். கீழ்அனுவம்பட்டு குளத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றார். நெல்லிக்குப்பம் ராமானுஜம் கூறுகையில், வைடிப்பாக்கத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். சோழவள்ளியில் உலர்களம் அமைக்க வேண்டும் என்றார்.
அதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story