கணியம்பாடி அருகே எருதுவிடும் விழாவில் பாய்ந்து ஓடிய ‘அசுரன் காளை’ ரெயிலில் அடிபட்டு பலி
கணியம்பாடி அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற பலம் வாய்ந்த அசுரன் என்ற காளை கட்டவிழ்த்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்தவாறு ஓடியது. அப்போது அந்த காளை ரெயிலில் அடிபட்டு இறந்தது
அடுக்கம்பாறை
கணியம்பாடி அருகே எருது விடும் விழாவில் பங்கேற்ற பலம் வாய்ந்த அசுரன் என்ற காளை கட்டவிழ்த்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்தவாறு ஓடியது. அப்போது அந்த காளை ரெயிலில் அடிபட்டு இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எருதுவிடும் விழா
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டன.
அதன்படி மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பியான ராஜேஷ் மற்றும் ரமேஷ் என்ற விவசாயிகளும் தாங்கள் வளர்த்து வந்த மூஞ்சூர்பட்டு அசுரன் என்று செல்லமாக அழைக்கப்படும் காளையையும் கலந்து கொள்ள அழைத்து வந்திருந்தனர்.
விழா தொடங்கும் முன்னதாக வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியில் காளைகள் பங்கேற்றன.அதன்படி விழா நடைபெறும் தெருவை சுற்றி காளைகளை உரிமையாளர்கள் அழைத்து வந்தனர். அப்போது அணிவகுத்து வந்த அசுரன் காளை உரிமையாளர்களின் பிடியில் இருந்து திடீரென அவிழ்த்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடியது.
தண்டவாளத்துக்குள் ஓடியது
அதனை வீரர்களுடன் உரிமையாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால் அசுரன் காளை திமிறிக்கொண்டு அதிவேகமாக பாய்ந்து ஓடியது.
வீரர்கள் அதனை மடக்கிப்பிடிப்பதற்காக ஓடினர். ஆனால் வேப்பம்பட்டு பகுதியில் அசுரன் காளை தண்டவாளம் வழியாக ஓட்டமெடுத்தது.
அந்த நேரத்தில் விழுப்புரத்திலிருந்து வேலூர் நோக்கி திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. காளையை பார்த்ததும் ரெயில் என்ஜின் டிரைவர் ெரயிலின் வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் பாய்ந்து வந்த காளையின் மீது ரெயில் மோதி விட்டது.
கதறி அழுதனர்
இதில் பலத்த காயமடைந்த அசுரன் காளை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இறந்த காளை அசுரன் பல்வேறு பகுதிகளில் நடந்த விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்று அசத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக ரெயிலில் அடிபட்டு இறந்ததை கண்டு உரிமையாளர்கள் கதறி அழுதனர். ரெயிலில் வந்த பயணிகளும் இதனை சோகத்துடன் பார்த்தனர்.
அதன்பின் மனிதர்களுக்கு செய்வது போலவே அசுரன் காளைக்கு இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விதிமுறையை சேர்க்க வேண்டும்
ரெயில் பாதையை ஒட்டி உள்ள ஊர்களில் காளை விடும் விழா நடத்தும்போது இதுபோன்ற விபரீதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கொங்கராம்பட்டு பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவில் பங்கேற்ற காளை ஒன்று மதிய வேளையில் கண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்திற்குள் புகுந்தது. நல்லவேளையாக அப்போது கண்ணமங்கலம் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் குறைந்த வேகத்தில் புறப்பட்டதால் ரெயிலை உடனடியாக நிறுத்தி காளையை டிரைவர் காப்பாற்றினார்.எனவே ரெயில்பாதை பகுதிகளில் இதுபோன்ற விழா நடந்தால் காளைகள் தண்டவாளப்பகுதிக்கு ஓடி வருவதை தவிர்க்க முன்னேற்பாடுக்கான விதிமுறைகளை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story