தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 March 2022 11:52 PM IST (Updated: 25 March 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி


குப்பை கிடங்காக மாறிய குளம் 


  சோளிங்கர் கிழக்கு பஜார் பகுதியில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த நாரை குளம் என்ற சண்முக தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தில் திருவிழாக்காலங்களில் சோழபுரீஸ்வரர் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்து தண்ணீரை குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளக்கரை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். கழிவுநீரும் இந்த குளத்தில் விடப்படுகிறது. ேமலும் இங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றி குளத்தில் கழிவுநீர் விடாதவாறு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -வேலன், சோளிங்கர்.
  
குடிநீர் கிணறு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் 

  
  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரியாப்பட்டு கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை தனிநபர் ஆக்கிரமித்து, அதில் வைக்கோலை வைத்துள்ளார். தற்போது கோடை காலம் தொடங்கி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அந்தக் கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் கிணறு ஆக்கிரமிப்பை அகற்றி கிணற்றை மீட்க வேண்டும்.
  -ஏழுமலை, நரியாப்பட்டு.
  
நச்சுப்புகையால் பொதுமக்கள் அவதி 

  
  வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமம் 2-வது வார்டு புதுத்தெருவில் அந்தப்பகுதியில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி தீ வைத்து வருகின்றனர். இந்தப்பகுதியில் பஸ்நிலையம், பள்ளி, ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி ஆகியவை உள்ளன. குப்பைகளை எரிப்பதால் அதில் இருந்து ஏற்படும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -நதீம் அகமது, வளத்தூர்.
  
தினத்தந்திக்கு நன்றி 

  
  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பாலூட்டும் அறை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
  -குமரேசன், சோளிங்கர்.
  
கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் 

  
  வேலூர் கோட்டை அகழியில் இருந்து உபரிநீர் புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக வெளியே செல்கிறது. அந்த கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கழிவுகள் கொட்டப்படுவதால் உபரிநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உபரிநீர் சீராக செல்ல, கால்வாயில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  
ஆவின் பாலகம் மீண்டும் திறப்பது எப்போது? 

  
  திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் சமயத்தில் இந்த கடையின் முன்பு கூட்டம் அதிகமாக கூடியதால் கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து உள்ளதால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் நலனை கருதி மீண்டும் ஆவின் பாலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராஜ், திருவண்ணாமலை.
  
குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா? 

  
  அரக்கோணம் வட்டம் சித்தாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
  -சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி.


Next Story