கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
காரைக்குடி,
தேவகோட்டை அருகே கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜை நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
பூச்சொரிதல் விழா
தேவகோட்டை அருகே உள்ளது கோட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 21-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய திருநாளான நேற்று கிராம மக்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
கலை நிகழ்ச்சி
இன்று(சனிக்கிழமை) திரைப்பட புகழ் பாலா குழுவினரின் முளைக்கொட்டுதல் நிகழ்ச்சியும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் விழா மற்றும் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (28-ந்தேதி) அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் இரவு வள்ளி திருமணம் நாடகம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மறுநாள் (29-ந்தேதி) அன்று காலை பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் மற்றும் முளைப்பாரியை அம்மன் சன்னதியில் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு ஸ்ரீஅரிசந்திர மயான காண்டம் நாடகம் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 30-ந்தேதி அன்று மாபெரும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்றைய தினம் கோவில் அருகே உள்ள மஞ்சுவிரட்டு திடலில் மாலை 3 மணிக்கு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக முளைப்பாரி செலுத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோட்டூர் கிராம மக்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story