முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கறம்பக்குடி
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அந்த மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கறம்பக்குடி ஜமாத் கமிட்டி சார்பில் நேற்று ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கறம்பக்குடி பெரிய பள்ளிவாசலில் இருந்து கண்டன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் பள்ளிவாசல் தெரு, தட்டாரதெரு, கடைவீதி வழியாக சென்று கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது.
பின்னர் அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் கமிட்டி தலைவர் கலிபுல்லா தலைமை தாங்கினார். இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்தும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கறம்பக்குடியில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் கடைகளும் மதியம் 12 மணி முதல் 2 மணிவரை அடைக்கப்பட்டது. ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பொன்னமராவதி பஸ் நிலையம் அருகே அனைத்து கட்சிகள் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்கள் பாதை இயக்கம், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், வி.சி.க., மே-17 இயக்கம், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story