போலீசாருக்கு பாலின உணர்திறன் பயிற்சி
போலீசாருக்கு பாலின உணர்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு பாலின உணர்திறன் பயிற்சி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனோதத்துவ நிபுணர்களான டாக்டர்கள் அன்பழகி, திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசியதுடன், ஆலோசனைகளை வழங்கினர். இதில் குழந்தைகளுக்கு எப்படி நற்பண்புகளை கற்றுக் கொடுப்பது, கணவன்-மனைவிக்குள் கருத்து பரிமாற்றங்களை புரிந்து கொள்வது என்பது பற்றி எடுத்துக்கூறப்பட்டது. மேலும் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமானவர்கள். ஆண்கள், பெண்கள் என்ற பாரபட்சமின்றி செயலாற்ற வேண்டும். ஆண்களைவிட மனதைரியம் உடையவர்கள் பெண்கள். பெண்களின் உறுதுணையோடுதான் ஆண்கள் தன்னம்பிக்கையோடு இருக்கிறார்கள். தாய், தங்கை மற்றும் குடும்பத்தினரை பார்ப்பதுபோல் மற்ற பெண்களையும் தன்னுடன் பிறந்த சகோதரிகளாக, தாயாக கருத வேண்டும். அதையே வருங்கால சந்ததியான குழந்தைகளுக்கும் சிறுவயது முதலே கூறி, அறிவு புகட்ட வேண்டும். அவ்வாறு புகட்டினால் பாலியல் குற்றங்கள் மற்றும் பல்வேறு குற்றங்களில் இருந்து குழந்தைகளை பேணி பாதுகாக்க முடியும். குழந்தைகளிடத்தில் பேசுவதற்கு, பழகுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்கள் கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது. இதில் போலீசார் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். பயிற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், சுமதி, குணசேகரன், ஜெகதீசன், ரவி சக்கரவர்த்தி, கோபி மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகிராபானு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story