பாபாபுடன்கிரி மலையில் 50 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்: 8 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்


பாபாபுடன்கிரி மலையில் 50 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்: 8 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 26 March 2022 3:33 AM IST (Updated: 26 March 2022 3:33 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலையில் 50 அடி ஆழ பள்ளத்தில் தனியார் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்

சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் பாபாபுடன்கிரி மலையில் 50 அடி ஆழ பள்ளத்தில் தனியார் பஸ் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். 

தனியார் சுற்றுலா பஸ்

சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரிகோணமலை பகுதியில் அமைந்துள்ளது தத்தா பீடம். அங்கு தத்தா பாதம் அமைந்துள்ளது. மேலும் இந்த மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான பாபாபுடன்கிரி மலையும் அமைந்திருக்கிறது. இதனால் இந்த மலைப்பகுதிக்கு தினமும் தனியார் மற்றும் அரசு பஸ்கள், ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல் நேற்று முன்தினம் மாலையில் பாபாபுடன் கிரி மலைப்பகுதிக்கு ஒரு தனியார் சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. 

அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் மலைப்பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர் அங்கிருந்து 7 பயணிகளுடன் அந்த பஸ் திரும்பியது. அந்த பஸ் அத்திகுந்தி அருகே வந்து கொண்டிருந்தது. 

8 பேர் படுகாயம்

அப்போது மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் அந்த பஸ் திரும்பியது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி 50 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து உருண்டு கவிழ்ந்தது. 

இதில் பஸ்சில் பயணித்து வந்த மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவை சேர்ந்த செரீனா பானு(வயது 50), உப்பள்ளியைச் சேர்ந்த பேகம்பீவி(74), ரஷிதா பானு(30), மீரஜை சேர்ந்த ஹனீப்(15), ரக்சிதா(4) மற்றும் டிரைவர் சாதிக்(24) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுருதி, சிக்கமகளூரு புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் தீயணைப்பு படையினர், விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை பள்ளத்தில் இருந்து மீட்டனர். 

பரபரப்பு

அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story