பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பவானிசாகர் அருகே உள்ளது புங்கார் காலனி. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் பவானிசாகர்-பண்ணாரி ரோட்டில் உள்ள புங்கார் காலனியில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மைதிலி அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குடிநீர் வினியோகிக்க கோரி...
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘புங்கார் காலனி பகுதிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி அவதிப்படுகிறோம். உடனே எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு ஆணையாளர் கூறும்போது, ‘இன்னும் 15 நாட்களுக்குள் சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் பவானிசாகர்-பண்ணாரி ரோட்டில் சுமார் 50 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story