மருத்துவ துறையை சீரமைப்பதில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துகிறார்-மந்திரி சுதாகர்
மருத்துவ துறையை சீரமைப்பதில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துகிறார் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்
மங்களூரு: மருத்துவ துறையை சீரமைப்பதில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துகிறார் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்.
மோடி அதிக கவனம்
மங்களூருவில் நேற்று ‘பிசியோகான்-2022’ என்ற பிசியோதெரபி மாநாடு நடந்தது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்துகொண்டு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
அமெரிக்காவில் 10 ஆயிரம் மக்கள்தொகையில் 7 சதவீத பிசியோதெரபிஸ்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் 10 ஆயிரம் மக்கள் தொகையில் 0.59 என்ற விகிதத்தில் தான் பிசியோதெரபிஸ்டுகள் உள்ளனர்.
மருத்துவ துறையை சீரமைப்பதிலும், நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதிலும் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார். மருத்துவ கல்லுரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். இது டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க உதவும்.
திறமை மிகவும் அவசியம்
மருந்துகள் நோய்களை குணப்படுத்துகின்றன. ஆனால் பிசியோதெரபி ஒரு புதிய வாழ்க்கையை தருகிறது. இயலாமை, நரம்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பல பிரச்சினைகளுக்கு பிசியோதெரபி தீர்வு அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அறிவுதான் மிக முக்கியமான சக்தி. பிசியோதெரபியில், திறமை மிகவும் அவசியம்.
பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி இங்கு முக்கிய பங்கு வகிக்கும். பிசியோதெரபி என்பது மிகவும் பழமையான மருத்துவம். நமது இந்திய மருத்துவ முறை, ஆயுர்வேதம் பிசியோதெரபியின் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
25 லட்சம் பேருக்கு...
ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் செயல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம். கொரோனா தொற்றுநோய் பரவலின்போது, நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக சுகாதாரத் துறை, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் (நிமான்ஸ்) ஒத்துழைத்தது. கொரோனாவின் தொடக்கத்தில், மக்கள் மனரீதியாக மிகவும் பயத்தில் இருந்தனர்.
இதன் காரணமாக, அவர்களுக்கு மன வலிமை மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க, ஆலோசனை அமர்வுகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்தின் கீழ், கொரோனா காலத்தில் சுமார் 25 லட்சம் பேருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
படிப்பை தொடர...
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய மாணவர்களுக்கு 60 மருத்துவ கல்லூரிகளில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் படிப்புக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. அவர்கள் தொடர்ந்து படிக்க நமது அரசு வாய்ப்பு கொடுக்கிறது.
இதுதொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு பிறகு மாணவர்கள் உக்ரைன் செல்ல விரும்புவார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது அவர்களின் கற்றலை தொடர அனுமதிக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கையாகும். அரசு, தனியார் கல்லூரிகளில் இந்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story