பழமை வாய்ந்த கோவிலில் கோபுரத்தில் இருந்த 4 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள்
கோலாா் தங்கவயலில் பழமை வாய்ந்த கோவிலில் கோபுரத்தில் இருந்த 4 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
கோலார் தங்கவயல்: கோலாா் தங்கவயலில் பழமை வாய்ந்த கோவிலில் கோபுரத்தில் இருந்த 4 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சாமி சிலைகள் சேதம்
கோலார் தங்கவயல் பாரன்டப்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கதிரேனஹள்ளி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால்சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மாநில அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் அந்த கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் சிலர் கோவில் கோபுரத்தின் மீது வைக்கப்பட்டிருந்த 4 சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்கள் கைரேகைகளை பதிவு செய்து தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி, கதிரேனஹள்ளி கிராமத்துக்கு சென்று கோவிலில் ஆய்வு செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் சில தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.
4 தனிப்படை அமைப்பு
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து, முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தின் அருகே 300 மீட்டர் தூரத்தில் தான் மசூதி உள்ளது. இங்கு கடந்த நாட்களாக உரூஸ் திருவிழா நடந்து வந்தது. தற்போது அந்த திருவிழா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் கோவிலை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story