‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 March 2022 4:39 AM IST (Updated: 26 March 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தாமதமாகும் சாலை பணி

கிருஷ்ணகிரி மாவட்டம் 23-வது வார்டு திருவண்ணாமலை ரோடு பைபாஸ் அருகில் ரோட்டிற்கு வடக்குபுறம் செல்லும் சாலையை தார் சாலை மாற்ற சாலை தோண்டப்பட்டது. 2 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை மீண்டும் சாலை பணி தொடங்கவில்லை. அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பத்குமார், திருவண்ணாமலை ரோடு, கிருஷ்ணகிரி. 
===
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையை இணைக்கும் நகர புறவழிச்சாலையை இரு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் கடக்கும்போது அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.ராஜமணிகண்டன், நாமக்கல்.
===
சாலை நடுவே பள்ளம் 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கோவிந்தராஜாபாளையம் 8-வது வார்டில் பொதுகழிப்பறை எதிரே தார்சாலை- சிமெண்டு சாலைக்கும் இடையே செல்லும் சாக்கடை கால்வாயின் மீது போடப்பட்ட சிமெண்டு மூடி உடைந்து 5 மாதங்கள் ஆகிறது. இதனால் சாலையின் நடுவே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அந்த பகுதி மக்கள் அந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அப்படி பயணம் செய்யும் போது சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இந்த ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், கோவிந்தாராஜாபாளையம், ஆத்தூர்.
===
சுகாதார சீர்கேடு

சேலம் 60-வது வார்டு சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகர் சாலையோரத்தில் கழிவு பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குவிந்துள்ள கழிவு பொருட்களை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சீலநாயக்கன்பட்டி, சேலம்.
==
அறிவிக்கப்படாத மின்வெட்டு

கிருஷ்ணகிரி நகரில் சில மாதங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், கிருஷ்ணகிரி.
==
கொசு மருந்து அடிக்க வேண்டும்

சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த பெருமாம்பட்டி பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தூங்க கூட முடிவதில்லை. கொசு தொல்லையால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-பி.சோமு, பெருமாம்பட்டி, சேலம்.
-------
பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களில் கணிசமானோர் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் மூலம் அரசு கலைக் கல்லூரிக்கு தினமும் சென்று வருகிறார்கள். கல்லூரி நேரத்தில் டவுன் பஸ்களில் செல்லும் மாணவ- மாணவிகள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால் அதற்கேற்ப கல்லூரிக்கு செல்லும் மற்றும் திரும்பும் நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேஷ், தர்மபுரி.

Next Story