மும்பையில் ஐ.பி.எல். வீரர்களை மைதானத்துக்கு அழைத்து செல்ல தனி வழித்தடம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 March 2022 6:56 PM IST (Updated: 26 March 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மைதானங்களுக்கு செல்ல வசதியாக தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் ஈடுபடுகிறார்கள்.

மும்பை, 
ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மைதானங்களுக்கு செல்ல வசதியாக தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 1,100 போலீசார் ஈடுபடுகிறார்கள். 
பசுமை வழித்தடம்
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை, நவிமும்பை, புனே நகரங்களில் மட்டும் நடைபெறுகிறது. மும்பையில் வான்கடே, பிராபோர்ன் மைதானங்களிலும், நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திலும் போட்டிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலான போட்டிகள் மும்பையில் நடைபெறுகிறது. 
மும்பையில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் வீரர்கள் அங்குள்ள வான்கடே, பிராபோர்ன் மைதானங்களுக்கும், மும்பையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள நவிமும்பை மைதானத்திற்கும் சாலை மார்க்கமாக பஸ்களில் அழைத்து செல்லப்பட உள்ளனர். 
 எனவே வீரர்கள் மற்றும் ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சரியான நேரத்தில் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு செல்ல வசதியாக மும்பை போலீசார் தனி பாதையான பசுமை வழித்தடம் (கிரீன் காரிடார்) அமைத்து உள்ளனர்.
1,100 போலீசார் பாதுகாப்பு
 இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " மும்பையில் ஐ.பி.எல். போட்டிக்காக பாதுகாப்பு பணியில் போக்குவரத்து போலீசார் உள்பட 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரர்கள் தங்கி உள்ள ஓட்டலுக்கும், மைதானங்களுக்கும் உள்ள அதிக தூரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் கூடுதல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். பசுமை வழித்தடம் குறித்து பார்க்கும் போது, போட்டிகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவர்ஸ்) நடைபெற உள்ளதால் ஒவ்வொரு அணிக்கும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் (எஸ்கார்ட்) வழங்கப்பட உள்ளது" என்றார்.
 மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மும்பை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் ராஜ்வர்தன் சின்கா கூறுகையில், “வீரர்களை ஓட்டலில் இருந்து மைதானங்களுக்கு அழைத்து செல்லவும், போட்டிகளின் போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் எங்களிடம் திட்டம் தயாராக உள்ளது. வீரர்கள் ஓட்டலில் இருந்து பயிற்சி, போட்டிக்கு குறித்த நேரத்தில் செல்வதை நாங்கள் உறுதி செய்வோம். அதே நேரத்தில் பொது மக்களும் பாதிக்கப்படமாட்டார்கள். வீரர்கள் செல்வதற்காக எந்த பாதையும் மூடப்படாது. ஒவ்வொரு அணியையும் பயிற்சி, போட்டிக்காக போலீசார், போக்குவரத்து போலீசார் அடங்கிய குழு பாதுகாப்பாக அழைத்து செல்லும்” என்றார். 


Next Story