விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் சகாதேவன் போட்டியின்றி தேர்வு


விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் சகாதேவன் போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 26 March 2022 7:38 PM IST (Updated: 26 March 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் சகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கூடலூர்

ஓவேலி பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் சகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஓவேலி பேரூராட்சி

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 11 வார்டுகளையும், காங்கிரஸ் 4 வார்டுகளையும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், சுயேச்சை தலா 1 வார்டையும் கைப்பற்றியது.
பின்னர் நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சித்ரா தேவி போட்டியின்றி வெற்றி பெற்றார். 

ஆனால்  துணைத்தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3-வது வார்டு கவுன்சிலர் சகாதேவன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த செல்வரத்தினம் வெற்றி பெற்றார். இதற்கிடையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சி தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதை ஏற்று துணைத்தலைவர் பதவியை செல்வரத்தினம் ராஜினாமா செய்தார். 

போட்டியின்றி தேர்வு

இந்தநிலையில் இன்று காலை 10 மணிக்கு துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் தனபாலன், தேர்தல் பார்வையாளர் பூபதி மேற்பார்வையில் தேர்தல் அலுவலர் சி.ஹரிதாஸ் மறைமுக தேர்தலை நடத்தினார். 

அப்போது துணைத்தலைவர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 3-வது வார்டு கவுன்சிலர் சகாதேவன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் அனைவரும், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 


Next Story