2 கிலோ விதை நெல்லில் 92 மூட்டை மகசூல் பெற்றது எப்படி ஒபாமாவிடம் பாராட்டு பெற்ற தெலுங்கானா வேளாண் விஞ்ஞானி செயல்விளக்கம்
இயற்கை விவசாயத்தில் 2 கிலோ விதை நெல்லில் 92 மூட்டை நெல் மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து நெமிலி அருகே நடந்த முகாமில் ஒபாமாவிடம் பாராட்டு பெற்ற தெலுங்கானா மாநில வேளாண் விஞ்ஞானி செயல் விளக்கம் அளித்தார்.
நெமிலி
இயற்கை விவசாயத்தில் 2 கிலோ விதை நெல்லில் 92 மூட்டை நெல் மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து நெமிலி அருகே நடந்த முகாமில் ஒபாமாவிடம் பாராட்டு பெற்ற தெலுங்கானா மாநில வேளாண் விஞ்ஞானி செயல் விளக்கம் அளித்தார்.
நேரடி பயிற்சி முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆலப்பாக்கம் அடுத்த துரைபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள வேளாண் பண்ணையில் இயற்கையான முறையில் விவசாயம் செய்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் நேரடி பயிற்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக, 400-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்ற தெலுங்கானாவின் வேளாண் விஞ்ஞானி நாகரத்தின நாயுடு கலந்துகொண்டு விழிப்புணர்வு பயிற்சியை வழங்கினார். அமரிக்க அதிபராக இருந்த ஒபாமா முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, இவரது நிலத்திற்கு நேரடியாக சென்று விவசாய முறைகளை பார்வையிட்டு விருது வழங்கி பாராட்டியுள்ளார்.
2 கிலோ விதை நெல்லில் 92 மூட்டை மகசூல்
முகாமில் வேளாண் விஞ்ஞானி நாகரத்தினம் தான் மேற்கொண்ட இயற்கை வேளாண் முறைகளையும், 2 கிலோ பாரம்பரிய விதை நெல்லில் 92 மூட்டை மகசூல் பெற்றது எப்படி என்பது குறித்தும், பருவகால சூழலுக்கு ஏற்ப விதை தேர்வு, விதை நேர்த்தி, நாற்றங்கால் அமைப்பு, நடவு, இடுபொருள், நோய் தாக்கம், பூச்சி கட்டுப்பாடு மற்றும் பயிர் மேலாண்மை குறித்து தெளிவான விளக்கங்களுடன் எடுத்து கூறினார்.
பெரும்பான்மையான விவசாயிகள் அறியாமையின் காரணமாக தேவைக்கு அதிகமான அளவில் நீர் பாய்ச்சுவதால் பயிரின் வேர் பகுதி பூமியில் ஆழமாக செல்லாமல் மேற்பகுதியிலேயே தங்கிவிடுகிறது. சரியான முறையில் நீர் பாய்ச்சினால் பூமிக்கு அடியில் வேர் செல்லும். மேலும் இவ்வாறு செய்வதால் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட எந்தவிதமான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் பயிருக்கு சேதம் இருக்காது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விதை நெல்லுடன் ரூ.1000 வழங்கிய பேராசிரியர்
முகாமில் பாரம்பரிய விதைகளை மீட்டுருவாக்கம் செய்து வரும் களத்தூர் கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் கந்தசாமி கலந்து கொண்டு தான் சேகரித்து வைத்துள்ள அரியரக பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், நம்மில் பலர் ஏதோ ஒரு வகையான நோய்க்கு ஆளாகி மருந்து மாத்திரைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நாம் நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து விட்டு பாஸ்ட் புட் கலாசாரத்திற்கு மாறியதன் விளைவே இதற்கு காரணமாகும். மேலும் அண்மையில் வெளிவந்த ஆய்வு ஒன்று 63 சதவீதம் பேர் ஆண்மை குறைவு காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகளாகிய நீங்கள் செயற்கை உரங்களை தவிர்த்து படிப்படியாக இயற்கை வேளாண்மைக்கு திரும்பி, நமது பாரம்பரிய நெல் மணிகளை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளை வழிநடத்தும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. அந்த அடிப்படையில் நான் அரும்பாடுபட்டு சேகரித்து வைத்துள்ள அரியரக நெல் மணிகளை எனது மகளாக நினைத்து உங்களிடம் ஒப்படைக்கிறேன். மகளுக்கான சீர்வரிசை தருவது நமது மரபு என்பதால், விதை நெல்லுடன் ரூ.1000 சேர்த்து வழங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story