பூந்தமல்லி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் - இன்று நடக்கிறது
பூந்தமல்லி நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பூந்தமல்லி நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 வார்டுகளில் தி.மு.க., 12 வார்டுகளை கைப்பற்றியது. அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. நகராட்சி தலைவர் பதவியை 17-வது வார்டில் வெற்றி பெற்ற தனது மனைவி மாலதிக்கு பெற்றுதர முன்னாள் தி.மு.க. நகர செயலர் ரவிக்குமார் காய் நகர்த்தினார். ஆனால் 18-வது வார்டு காஞ்சனா சுதாகரை நகராட்சி தலைவர் வேட்பாளராக தி.மு.க., தலைமை கழகம் அறிவித் தது. இதனால் அதிருப்தி அடைந்த ரவிக்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து மனைவியை போட்டியிட வைக்க முடிவு செய்தார்.
மார்ச் மாதம் 4-ந்தேதி தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க., சார்பில் காஞ்சனா போட்டியிட்டார். அவரை எதிர்த்து ரவிக்குமாரின் மனைவி மாலதி போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் கீதா என்பவரும் போட்டியிட்டார். 2 கவுன்சிலர்கள் ஓட்டு போட்ட நிலையில், 3-வதாக ஓட்டு போட சென்ற கவுன்சிலர், தலைவர் தேர்தலை முறையாக நடத்தவில்லை, அதனால், தேர்தலை நிறுத்துங்கள் என்று கூறினார்.
இதற்கு கூட்ட அரங்கில் இருந்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைவருக்கான தேர்தலை மறு தேதி அறிவிக்கும் வரை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
இதேபோல் மதியம் நடந்த துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டதால் நகர செயலாளர் பொறுப்பில் இருந்து ரவிக்குமாரை அந்த கட்சி தலைமை நீக்கியது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.
தி.மு.க., வில் இருந்து நீக்கப்பட்ட ரவிக்குமார் மீண்டும் தனது மனைவியை போட்டியிட வைப்பாரா? இல்லையா? என்பது இன்று (வெள்ளிக்கிழமை) காலை தெரியும். பூந்தமல்லி நகராட்சி தலைவருக்கான தேர்தல் மீண்டும் இன்று நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story