திருப்பூர் மாவட்டத்தில் 48 மணி நேர வேலைநிறுத்தம் திங்கட்கிழமை தொடங்குகிறது
திருப்பூர் மாவட்டத்தில் 48 மணி நேர வேலைநிறுத்தம் திங்கட்கிழமை தொடங்குகிறது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 48 மணி நேர வேலைநிறுத்தம் திங்கட்கிழமை தொடங்குகிறது. மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
2 நாள் வேலைநிறுத்தம்
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் 2 நாட்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று காலை திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள், 100-க்கும் மேற்பட்ட சம்மேளனங்கள் இணைந்து 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அனைத்து துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கி 60 வயது முடிந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
வியாபாரிகள் சங்கத்தினர்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தம் நடக்கிறது. அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி., வங்கி ஊழியர்கள் முழுமையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.
கடைகளை அடைக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்கள் சார்பில் கடிதம் கொடுத்து வேண்டுகோள் வைத்துள்ளோம். பனியன் முதலாளிகள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் கொடுத்து ஆதரவு கேட்டுள்ளோம். பொதுவேலைநிறுத்தம் முழுவீச்சில் நடைபெறும்.
8 இடங்களில் மறியல்
மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாராபுரம், அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம் உள்ளிட்ட 8 மையங்களில் மறியல் போராட்டம் மத்திய அரசு அலுவலகம் முன் நடைபெறும். திருப்பூரில் ரெயில் நிலையம் முன் மறியல் நடைபெற உள்ளது. நாளைமறுநாள் மாவட்டம் முழுவதும் 8 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கராஜ், சம்பத் (சி.ஐ.டி.யு.), ரவி (ஏ.ஐ.டி.யு.சி.), ரங்கசாமி, மகேஷ் (எல்.பி.எப்.), பெருமாள் (ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி (எச்.எம்.எஸ்.), பாண்டியன் (எம்.எல்.எப்.) ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story