வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண் கழுத்தை இறுக்கி கொலை; கணவர் கைது


வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண் கழுத்தை இறுக்கி கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 26 March 2022 9:08 PM IST (Updated: 26 March 2022 9:08 PM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு: வரதட்சணை வாங்கி வர மறுத்த பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ்(வயது 26). கார் டிரைவர். இவருக்கும், சவுமியா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வரதட்சணை கேட்டு சவுமியாவிடம், யோகேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக வரதட்சணையாக ரூ.2 லட்சம் வாங்கி வரும்படி சவுமியாவிடம், யோகேஷ் கேட்டு உள்ளார். ஆனால் வரதட்சணை வாங்கி வர சவுமியா மறுத்து விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் சவுமியாவை, யோகேஷ் துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் சவுமியாவின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய யோகேஷ் உங்கள் மகள் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

மாரடைப்பால் இறந்ததாக நாடகம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சவுமியாவின் பெற்றோர் யோகேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சவுமியா இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பேடரஹள்ளி போலீசாரும் அங்கு வந்து சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சவுமியாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் யோகேசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் சவுமியா கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது. 
இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். கைதான யோகேஷ் மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story